Sunday, February 16, 2025

இந்தியத் தூதுவருடன் சந்திப்பு

ஜனவர் 2-ஆம் தேதி  பாரதி தமிழ் சங்க நிர்வாகிகள் வல்லம் பஷீர் (தலைவர்), கவிஞர் நாகூர் அப்துல் கையூம் (பொதுச்செயலாளர்), தாவூத் (பொருளாளர்), இளையராஜா (இலக்கியச் செயலாளர்), திருமதி ஹன்சுல் கனி (கலை, பண்பாட்டு கேளிக்கைச் செயலாளர்), முத்துவேல் (உள்தணிக்கையாளர் & பொங்கல் விழா ஒருங்கிணைப்பாளர்), சுபாஷ் (துணைச் செயலாளர்) இவர்களை மேன்மைமிகு இந்தியத் தூதுவர் வினோத் கே. ஜேக்கப் , இஜாஸ் அஸ்லம் (முதன்மைச் செயலாளர் அரசியல் துறை) ஆகியோரும் உடனிருந்து வரவேற்றனர்.

இந்த சந்திப்பு இந்தியத்தூதுவரின் இல்லமான INDIA HOUSE மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரதி தமிழ் சங்கம் சார்பில் 17-01-2025 நாளன்று நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கவும், சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழுவை (2024-2026) அறிமுகம் செய்ய வேண்டியும் இந்த சந்திப்பு இனிதே நடைபெற்றது.
பொதுவாக இந்தியத் தூதுவரக அலுவலகத்தில் மட்டுமே இதுபோன்ற அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு ஒத்துக் கொள்ளும் இந்தியத் தூதுவர் 'பாரதி தமிழ் சங்கம்' என்றதுமே தனது இல்லத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். காரணம் சென்னையில் வளர்ந்த அவர் தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதுமட்டுமின்றி இலங்கை பிரச்சினை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் இலங்கையில் சமாதானம் நிலவ தமிழ்ச் சமுதாயத்திற்காக் அயராது பாடுபட்டவர்.
இந்திய அரசியல் சாசனத்தின் மூலப்பிரதிகளில் ஒன்று கண்டியிலிருந்து கிடைக்கப்பெற்று இவர் கைவசம் தற்போது உள்ளது. அப்பிரதியில் டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேருஜி, டாக்டர் அம்பேத்கர் உட்பட ஃபெரோஸ் காந்தி வரை அத்தனை பேர்களுடைய கையொப்பத்தையும் காணும் அரிய பேறு எங்களுக்குக் கிடைத்தது.
நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியில் வந்த கண்டி மன்னர் தமிழில் வடித்த ஒப்பந்தத்தில் இலங்கை புத்த பிட்சுக்களின் கையொப்பமிட்ட உடன்படிக்கை வரலாறு முதல் பண்டைய தமிழக - இலங்கை சரித்திரம் யாவையும் விரல் நுனியில் தகவல்கள் சுமந்திருக்கும் இவர் நடமாடும் அறிவுக் களஞ்சியமாக எங்களுக்கு காட்சியளித்தார்.
தமிழ் மீதுள்ள பற்றாலும், பஹ்ரைன் அரசாங்கத்தின் முறையான பதிவு பெற்ற பாரதி தமிழ் சங்க நிர்வாகிகளின் கோரிக்கையின் பேரிலும், இந்திய தூதவரக உள்ளரங்கில் ஏப்ரல், மே மாத வாக்கில் ஒருமாத காலம் 'தமிழ் மாதம்' கோலாகலமாக கொண்டாடுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. அது சமயம் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் இவைகளை பிரதிபலிக்கும் வகையில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், அருங்காட்சியகம், தமிழகத்திற்கு சுற்றுலாவை ஈர்க்க ஒளி ஒலி காணொளி நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என நம் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலங்காலமாகத் தொடரும் இந்தியா பஹ்ரைன் சுமூக உறவுக்கு இது ஒரு பாலமாக அமையும்.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை நனவாக்குதல் பாரதி தமிழ் சங்கத்தின் கடமை அல்லவா?
இந்த பரஸ்பர சந்திப்புக்கிடையில் தூதுவருடைய இல்லத்திலேயே தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி - காரம் இனிப்பு வகைகள் எங்களுக்கு வழங்கப்பட்டது.
எதிர்வரும் ஜனவரி 17ஆம் தேதி இந்தியன் கிளப் வளாகத்தில் நடைபெறவிருக்கும் பாரதி தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவுக்கு முதன்மை விருந்தினராக வந்திருந்து கட்டாயம் தான் கலந்துக்கொள்வேன் என உறுதி கூறினார். தமிழில் உரையாற்ற விரும்புவதாகக் கூறினார்.
பாரதி தமிழ் சங்கம் விழாவுக்கு மேன்மைமிகு வினோத் கே.ஜேக்கப் கலந்துக் கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
'இந்த இரண்டு வருட கால உங்களுடைய ஆட்சி காலத்தில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?" என்ற கேள்வியை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தூதுவர் நம்மிடம் கேட்டார்.
அதற்கு சற்றும் தாமதிக்காமல் "நாங்கள் பொறுப்பிலிருக்கும் காலத்தில் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களுக்காக சொந்தமாக ஒரு கட்டடத்தை நிறுவ வேண்டும். அதற்காக பஹ்ரைனிலுள்ள சுமார் 80,000 தமிழ்ச் சொந்தங்களை ஒருங்கிணைப்போம்" என்ற தன் குறிக்கோளை சங்கத்தின் கலை பண்பாட்டுச் செயலாளர் திருமதி ஹன்சுல் கனி முன்வைத்தார்.
இதைக்கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இந்தியத் தூதுவர் எங்களுடைய ஆசைகள் நிறைவேற வாழ்த்தினார்.
வாசல் வரை வந்து வழி அனுப்பிய தூதுவருக்கு நன்றி கூறி நாங்கள் விடைபெற்றபோது மகிழ்ச்சி பொங்க நிறைவான மனதுடன் வீடு திரும்பினோம்.
All reactions:
Abith Ali Namakkal, கா.மதிவாணன் வாணன் and 76 others

No comments:

Post a Comment